ஜெர்மனியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ரோபோ : உரிமையாளர் கைது!
ஜெர்மனியின் கொலோன் நகரில், 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ரோபோ ஒன்றை அந்நாட்டு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ரோபோவின் உரிமையாளரான 16 வயது இளைஞர் மற்றும் 19 வயதுடைய மற்றொரு நபர் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிவப்பு மற்றும் தங்க நிறத்தைக் கொண்ட, சுமார் 120 சென்டிமீற்றர் உயரமுள்ள குறித்த ரோபோ, நண்பர்கள் குழுவுடன் இருந்த சிறுமியின் பின்னால் சென்று அவரது முதுகைத் தொட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் உடலை நோக்கி தகாத முறையிலான அசைவுகளை ரோபோ மேற்கொண்டதாகவும், இதனால் அச்சமடைந்த சிறுமி அலறியபடி அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இதனையடுத்து ரோபோ காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
சம்பவத்தின்போது ரோபோவின் அசைவுகள் திட்டமிட்டு இயக்கப்பட்டனவா என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

