கீழ் அருவியாற்றுத் திட்டம் தொடர்பில் வவுனியாவில் விசேட கலந்துரையாடல் – சத்தியலிங்கம் எம்பி பங்கேற்பு…!
வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளை ஊடறுக்கும் கீழ் அருவியாற்றை தந்திரிமலை பிரதேசத்தில் மறித்து கட்டப்படும் நீர்த்தேக்கத் திட்டம் (கீழ் மல்வத்து ஓயா) தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (13.10.2026) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த திட்டம் தொடர்பிலான முழுமையான விளக்கங்களையும் சாதக பாதகங்கள் தொடர்பிலும் திட்ட முகாமையாளரால் இக்கலந்துரையாடலின் போது விளக்கமளிக்கப்பட்டது.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.உபாலி சமரசிங்க( பிரதி அமைச்சர்) மரு.பத்மநாதன் சத்தியலிங்கம், திரு.செல்வம் அடைக்கலநாதன், திரு.காதர் மஸ்தான் மற்றும் திரு.ம.ஜெகதீஸ்வரன், அரசாங்க அதிபர் வவுனியா, பிரதேச செயலாளர் செட்டிகுளம், வனவள திணைக்களத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் செட்டிகுளம் பிரதேசத்தில் ஆனைவிழுந்தான், சின்னச்சிப்பிக்குளம் உட்பட்ட பகுதிகளில் தமது வயற்காணிகள், மேட்டுக்காணிகளை இழக்கும் குடும்பத்தினருக்கு அவர்கள் எந்தளவு காணிகளை இழந்தாலும் பிரதான குடும்பமாகின் 1ஏக்கரும் உபகுடும்பமாகின் 1/2 ஏக்கரும் மாற்றுக்காணியாக வழங்குவதெனவும் எஞ்சிய காணிகளுக்கு நஸ்டஈடு வழங்குவதெனவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள், அவ்வாறில்லாமல் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் அதே விஸ்தீரனமான காணிகளை மாற்றுக்காணியாக மக்களுக்கு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
மாற்றுக்காணி போதிய அளவு இல்லையெனின் செட்டிகுளம் பிரதேசத்தில் காணப்படும் கைவிடப்பட்ட குளங்களை புனரமைத்து அக்குளங்களின் கீழ் உள்ள காணிகள் மக்களுக்கு மாற்றுக்காணியாக வழங்கலாம் என யோசனை முன்வைத்திருந்தார்.
அதேவேளை மாற்றுக்காணி வழங்கும்போது மிக அவதானத்துடன் அதிகாரிகள் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






