போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை.!
நுவரெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சீதையம்மன் ஆலய பகுதியில் போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற நுவரெலியா ஹாவாஎளிய பகுதியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பெற்ற சீதையம்மன் ஆலய பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
மேலும், அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களுடன் நாளாந்தம் உள்நாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
பிரதான சாலையில் நடந்து செல்ல வெள்ளை நிற கோடுகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூலம் போடப்பட்டு இருந்த போதிலும் அதி வேகமாக வரும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், கார்கள், வேன்கள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளால் பாரிய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நேற்று முன்தினம் வீதியை கடக்க முயன்ற போது அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறான விபத்துகள் நடைபெறாமல் இருக்க அப் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடமையில் ஈடுபடுத்த நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

