உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிராக இன்று மாபெரும் பேரணி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
39 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை பிரம்மாண்டமான எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோன்று, தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு, தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள் வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக் குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருட்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித் திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பேருந்துகளை இறக்குவது மக்களுக்கு வசதிகளை வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல. அபிவிருத்தி பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பேருந்துகளை வீதியில் விட்டுவிட்டு அதையே அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும் அடக்குமுறையையே செய்கின்றது.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச் செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில் நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

82 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

88 0 0
இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப்…

91 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

96 0 0