ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று (06) திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸ் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருக்கோவில், விநாயகபுரம் 01, முன்பள்ளி வீதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேமுல்ல அவர்களின் ஆலோசனையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் மேற்பார்வையிலும், பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன அவர்களின் வழிநடத்தலிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில், பொலிஸ் சார்ஜன்ட் 73646 விஜேகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் 79521 சமன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 93542 ருக்ஷான் ஆகியோரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



