உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி நாளை ஆரம்பம்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
102 பார்வைகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி நாளை (02.09.2026) நல்லூரில் ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படும் வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி மூன்றாவது முறையாக இடம்பெறுகிறது.

நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு கண்காட்சி ஆரம்பமாகிறது.

தொடர்ந்து 11.09.2026 வரை, தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீர் சார்ந்த ஆய்வுகளின் பெறுபேறுகள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அனுபவங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கிணறுகளை மையமாகக் கொண்ட வாழ்வியலைக் கொண்ட வடக்கு சமூகத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு கிணறுகளை முறையாகப் பராமரிப்பதுடன், கிராமியக் குளங்களைத் தூர்வாரி அவற்றில் நீரைச் சேமிப்பதும் அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிராம மக்களின் பங்களிப்புடன் குளங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி தூர்வாருதல், நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முப்பரிமாண மாதிரிகள், புகைப்படங்கள், பதாகைகள் மற்றும் ஆய்வுத் தகவல்கள் ஊடாகக் கண்காட்சியில் விளக்கப்படவுள்ளன.

மேலும், நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள், வடமாகாணம் எதிர்கொள்ளும் நீர்வள நெருக்கடிகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல் கருத்துரைகள், கலை நிகழ்வுகள், பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா, ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆய்வுகளின் பெறுபேறுகளையும், மக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் அனுபவங்களையும் ஒருங்கிணைத்து இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மக்களிடம் கருத்துக்களைப் பெற்று அவற்றை பதிவு செய்வதுடன், நீர்வளப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்வதற்கும் இந்தச் செயற்றிட்டம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் பல்வேறு தன்னார்வக் குழுக்களின் ஒத்துழைப்புடன் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கலந்துரையாடல்கள், நீர்வள மாதிரிகள், ஆய்வுத் தகவல்கள், பதாகைகள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் குலுக்கல் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு வடமாகாணத்தின் நீர்வள நெருக்கடிகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதில் தங்களது பங்களிப்பு குறித்து அறிந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

1 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

38 0 0