தலவாக்கலையில் அஸ்வெசும நிதி மோசடி.!
தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் (ரூ.916,000) நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி ஒருவரே இந்த நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அஸ்வெசும நிவாரணத்திற்குத் தாங்கள் தகுதியுடையவர்களாக இருந்தும், தங்களுக்கான பணம் கிடைக்கவில்லை என பயனாளிகள் தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பயனாளிகளுக்குச் சேர வேண்டிய பணம் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் நேற்று (07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் மேற்கொண்டுள்ளார்.
குறித்த வங்கிக் கணக்கு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கான நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடியின் மொத்தத் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று அதிகாரிகளை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.