200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனேடியப் பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த மேற்படி சந்தேகநபரின் நடத்தை மற்றும் பயணப் பொதிகள் மீது சந்தேகமுற்ற விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவரது உடைமைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே பயணப் பொதிகளுக்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹசீஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டவரிடம் சுங்கப் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா மற்றும் இலங்கையில் உள்ள எவருக்கு விநியோகிப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.



