2029 இல் பொது வேட்பாளரைக் களமிறக்கி அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம் – மனோ கணேசன் எம்.பி. சபதம்!
சட்டத்தின் மீதோ, நீதித்துறையின் மீதோ கை வைக்க வேண்டாம் என எச்சரிக்க விரும்புகின்றேன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி இந்த அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உள்ளிட்ட நால்வரின் மரணங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்த மரணங்கள் தொடர்பில் எம்மால் தீர்க்கமாகக் கூற முடியாது என்றாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
நிஷாந்த போன்ற திறைசேரி அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்லர். எனவே, இந்த விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்” – என்று வலியுறுத்தினார்.
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசின் தீர்மானத்துக்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த அவர், “மக்கள் இறுதியாக நம்பிச் செல்லும் ஒரே இடம் நீதிமன்றம்தான்.
அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசுகள் வரும், போகும்.
ஆனால் நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக நீதித்துறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து விளக்கிய அவர்,
“இது ஒரு அரசியல் கூட்டணி மட்டுமல்ல, நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் பொதுவான மேடை. தற்போது ஆறு கட்சிகள் இணைந்துள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் இதில் இணையும்.
அரசைக் கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை. அவர்கள் தமது பயணத்தைத் தொடரட்டும்.
ஆனால், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம்.”- என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் நாட்டைச் சீர்குலைக்கப் பார்க்கின்றன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த மனோ கணேசன் எம்.பி., “பிரதமர் பொய்களைக் கூறக்கூடாது.
அன்று நாட்டைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்தது நீங்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்” – என்று கடுமையாகச் சாடினார்.
தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.