உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

எதிர்காலத்தில் மாவட்ட ரீதியிலான ஆசிரிய நியமனங்களை வழங்க எதிர்பார்ப்பு!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
21 பார்வைகள்

தற்போது மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும், எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கே எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கல்வித் துறை மற்றும் பட்டதாரிப் படிப்புகள் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது சர்வதேச கல்வி மாநாட்டின் ஓர் முக்கிய அங்கமாக, ‘வடக்கு மாகாணத்தில் க.பொ.த. (சாதாரண தர) அடைவு மட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான பல்துறைசார் ஈடுபாட்டாளர்களின் உரையாடல்’ எனும் தொனிப்பொருளிலான மாநாடு இன்று (18.07.2026) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள கம்சியா மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்:

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படும் செயற்றிட்டங்களை வடக்கு மாகாண சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுடன் ஆரம்பத்திலும், அண்மையில் கலைப் பீடத்துடனும் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் ஊடாக எமது சமூக மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களை எவ்வாறு முன்னெடுக்கலாம் என ஆராய்ந்துள்ளோம்.

எமது கல்விப் புலத்துக்கு உதவும் வகையில் விஞ்ஞான பீடத்தினரும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள். இதேபோன்று வவுனியா பல்கலைக்கழகத்துடனும் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

இந்தக் கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று, எமது மாகாணத்தின் கல்வி மேம்பாட்டுக்காகப் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, ஆசிரியர்கள் தொடர்பில் பல சவால்கள் காணப்படுகின்றன.

மாகாணத்தினுள் ஆசிரியர் வளப்பங்கீடு சீராக அமையவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனைச் சீர்செய்ய மிகவும் அழுத்தமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அதன் வெளிப்பாடு மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது.

உதாரணமாக, வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி ஆசிரியர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தில், அவருக்கான பதிலீட்டு ஏற்பாடு என்ன என்பது தொடர்பில் நான் ஆராய்ந்தேன். அதில் அதிபரால் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் எனக்கு மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

குறித்த ஆசிரியர் ஒரு ‘மேலதிக ஆசிரியர்’ எனவும், அவருக்கு நேரசூசி வழங்கப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் உயர்தரப் பிரிவுக்கு முக்கிய பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர்.

அப்படிப்பட்ட ஒருவருக்குப் பாடவேளைகள் வழங்காமல் இருப்பது என்பது மிகவும் மோசமான நிர்வாகச் செயற்பாடாகும். இது தொடர்பில் விரிவான விளக்கம் கோரி, உரிய நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன்.

ஆசிரிய ஆளணி தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டாலும், அவை உரிய காலப்பகுதிகளில் தரவேற்றம் செய்யப்படாத அல்லது இற்றைப்படுத்தப்படாத நிலைமையே நீடிக்கின்றது.

இவற்றையெல்லாம் சீர்செய்து மாற்றங்களைக் கொண்டுவர முற்படும்போது, நிச்சயம் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். சவால்கள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன்.

தலைமைத்துவத்தின் தேவைப்பாடு குறித்து இங்கு பலராலும் வலியுறுத்தப்பட்டது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

தொடர்ச்சியாக நான் இதைத்தான் வலியுறுத்தியும் வருகின்றேன். பாடசாலை அதிபர்களுக்கு மாத்திரமன்றி, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் சிறந்த தலைமைத்துவம் அவசியமாகும்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசப் பாடசாலை ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன்.

அங்கு பாடசாலைக்குச் செல்லாமல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சில மாணவர்களை, ஊர் இளைஞர்கள் அவதானித்து அதிபரின் உதவியுடன் மீளவும் பாடசாலையில் இணைத்திருந்தனர்.

அதிபரின் சிறந்த தலைமைத்துவமும் ஊர் மக்களின் சமூக அக்கறையும் இணையும் போது, பாடசாலை இடைவிலகல் உள்ளிட்ட இவ்வாறான சவால்களை எளிதாகச் சரிசெய்ய முடியும்.

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மட்டக் கல்வியில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆராயும் ‘கல்வித் தொலைநோக்குகள்’ மன்றத்தின் செயற்பாடுகளை 4 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்டிருந்ததை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆளுநர் செயலகம் தயாராக இருக்கின்றது,’ எனத் தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டல் குழுவின் உறுப்பினரும், கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கலாநிதி எஸ்.அறிவழகன் மாநாட்டின் தவிசாளராகக் கலந்துகொண்டு தொடக்கவுரையாற்றினார்.

‘கல்வித் தொலைநோக்குகள்’ செயற்றிட்டம் குறித்த அறிமுக உரையைத் தொடர்ந்து, க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகளை மேம்படுத்துவது தொடர்பான தொனிப்பொருள் அமர்வுகள் இடம்பெற்றன:

பேராசிரியர் ஏ.நித்திலவர்ணன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்): வடக்கு மாகாணத்தில் சாதாரண தர அடைவு மட்டங்கள் குறைவடைவதற்கான காரணிகள்.

பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன் (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்): தேசிய கலைத்திட்டத்தை பல்வேறு மாணவர்களின் பின்னணிக்கு ஏற்ப இசைவாக்கம் செய்தல்.
பேராசிரியர் ரி.முகுந்தன் (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்): சாதாரண தரப் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மட்டத்திலான மதிப்பீட்டு முறைகளை மீளாய்வு செய்தல்.
கலாநிதி எஸ்.அதிரதன் (கொழும்புப் பல்கலைக்கழகம்): ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதன் மூலம் அடைவு மட்டங்களை அதிகரிக்கும் வழிமுறைகள்.

ஆர்.சர்வேஸ்வரா நெறிப்படுத்திய திறந்த கலந்துரையாடல் அமர்வில், வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி லாவண்யா சுகந்தன் ‘சவால்களிலிருந்து மாற்றத்தை நோக்கி:

வடக்கு மாகாணத்தில் க.பொ.த. (சாதாரண தர) அடைவு மட்டங்களுக்கான காரணிகள்’ எனும் தலைப்பில் கள நிலைமைகளைத் தெளிவுபடுத்தினார். நிகழ்வின் நிறைவாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன் தமது நிறைவுரையை வழங்கினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் உட்கார்ந்த நிலையில் மற்றுமொரு எலும்புக்கூடு அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு

மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக  தர்மலிங்கம் ரமேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இன்று…

41 0 0
இலங்கை செய்திகள்

ஹொரணையில் கோர விபத்து -இரு இளைஞர்கள் பலி!!

களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை – மொரகஹஹேன வீதியின், கனன்வில விகாரைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹொரணை பகுதியில்…

65 0 0