உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
132 பார்வைகள்

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசு மீண்டும் ஒருமுறை பஸ் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், கப்பலில் இருந்து இறக்கப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும், அமைச்சர்களின் எரிபொருள் தரகுப் பணம் ஒழிக்கப்படும் என்றும், மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்றும் பிரசாரம் செய்தது. ஆனால், இன்று எரிபொருள் விலை சுமார் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலையை மிகக் குறைந்த தொகையினால் அரசு குறைத்திருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது விலையை உயர்த்தும் அரசு, உலக சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில்லை.

உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது ஒரு விலைச் சூத்திரமும், விலை குறையும் போது மற்றொரு விலைச் சூத்திரமும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த விலை சூத்திரங்கள் மக்கள் விடுதலை முன்னணிகட்சி அலுவலகத்தில் தயாரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முறையான விலைச் சூத்திரம் பயன்படுத்தப்பட்டால் இவ்வாறு நடக்காது.

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 281 ரூபாவாக இருந்ததுடன், போரைக் காரணம் காட்டி அது 382 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. உலக நாடுகள் போர் முடிவடைந்ததும் டீசல் விலையைக் குறைத்த போதிலும் எமது அரசு அதனைக் குறைக்கவில்லை. அதேபோல், 293 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 92 ரக பெற்றோல் தற்போது 414 ரூபாவாக உயர்ந்துள்ளது. மக்களுக்கு வாழ முடியாத ஒரு எரிபொருள் விலைச் சூத்திரத்தையே அரசு உருவாக்கியுள்ளது.

ஒரு மாதத்துக்குள் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை உயர்த்திய அரசு, உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்த போது மூன்று தடவைகள் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இதன் மூலம் அரசு அதிக இலாபம் ஈட்டுவதுடன், தனியார் எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட இலாபம் கிடைக்கின்றது.

மேலும், 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் நுகர்வோருக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. தற்போது நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அது ஏழை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

எனவே, எரிபொருள் விலை குறைந்ததன் நன்மையை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும். கியூ.ஆர். முறைமை மற்றும் ஒற்றை இரட்டை இலக்க முறைகளின் கீழ் எரிபொருள் விநியோகிப்பது அவசியமற்றது. இந்தக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைச் சுருக்குவதால் இவற்றை அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

நாட்டில் டெங்கு நோய் தற்போது ஒரு மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளன. டெங்குவைக் கட்டுப்படுத்த அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் டெங்கு ஒழிப்புக்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. மத்திய அரசும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழிகாட்டல்களையோ அல்லது தரமான இயந்திர உபகரணங்களையோ வழங்கவில்லை.

டெங்குவை ஒழிப்பதில் இந்த அரசுக்கு எந்தவொரு அனுபவமும் இல்லை. தொழிற்சங்கத் தலைவர்களே உள்ளூராட்சி மன்றங்களின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான தீர்மானங்களை எடுப்பதற்கான அறிவு இல்லை. இதன் விளைவாக நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேநேரம், விவசாயிகள் இன்று பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரங்களை வழங்கவோ அல்லது நெல்லைக் கொள்வனவு செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லுக்கான நிலையான விலையைத் தீர்மானிக்கக் கூட அரசால் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி விவசாயிகளை முற்றாக ஏமாற்றியுள்ளது.

‘விவசாயி உலகுக்கு ராஜா’ எனக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று விவசாயிகளைக் ‘கசிப்பு வியாபாரிகள்’ என அவமதித்து வருகின்றனர். விவசாயிகளின் தோள் மீது ஏறி ஆட்சிப் பீடமேறிய தேசிய மக்கள் சக்தி இன்று விவசாயிகளை மறந்துவிட்டனர்.

எனவே, ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, நலிவடைந்துள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

110 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

105 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

109 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர் – பெறுமதிமிக்க வலைகள் நாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் புரிந்து கொடுக்குளாய்-ஆழியவளை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை…

85 0 0