அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும், சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட போதும் அவர்கள் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை? என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அரசின் இரட்டை நிலைப்பாட்டை இவ்வாறு சாடினார்.
அவர் மேலும் நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,
“அரச தரப்பினர் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்திய அதே பாடலைப் பாடிய ஒரே காரணத்துக்காகக் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு சாதாரண தமிழ் இளைஞர் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கொடூரமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பொதுச்சட்டம் என்பது அனைவருக்கும் சமமாகவே அமுல்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து, ஆளுந்தரப்புக்கு ஒரு சட்டம், சாதாரண பொதுமக்களுக்கு ஒரு சட்டம் எனச் சட்டம் தன் வளைந்து கொடுப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.
தொடர்ந்து அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது விவகாரம் குறித்துப் பேசிய அவர்,
“அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தற்போது முற்றிலும் அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டுக்காகச் சேவையாற்றிய ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில், அவருக்காக நாங்கள் அண்மையில் விசேட ஆசிர்வாதப் பூஜைகளை நடத்தினோம்.
இதில் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது என்று எனக்குப் புரியவில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பது எமது கடமையாகும்.” – என்றார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் மற்றும் இராணுவத்தினர் தொடர்பான குற்றப் புலனாய்வு விசாரணைகளை அரசு தங்களது அரசியல் மேடைத் தலைப்புகளாக மாற்றி நாளுமன்றத்திலும், வெளியிலும் மலிவான முறையில் அரசியலாக்கக் கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ எச்சரித்தார்.
அத்துடன், இந்தக் கோரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்குத் தற்போதைய அரசியல் நாடகங்களைக் கடந்து, முறையான விசாரணைகளின் மூலம் உண்மையான நீதி மட்டுமே தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.