உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் தடையின்றி அமோக விற்பனை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
14 பார்வைகள்

இலங்கையில் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் மற்றும் புகையற்ற புகையிலை தயாரிப்புகள் சந்தையில் இன்னும் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஓர் அபாயகரமான சூழல் நிலவுவது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புகையிலை தொழில்துறை அவதான நிலையம் மற்றும் சுகாதாரத்திற்கான இளம் தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

ஊடக சந்திப்பில் புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தைச் சேர்ந்த பி. தினேஷ்குமார் தெரிவிக்கையில், “இலங்கையில் ‘தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஒழுங்குமுறைகள் 2016’ இன் கீழ் மின் சிகரெட்டுகளைத் தயாரிப்பது, இறக்குமதி செய்வது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும், அவை தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான பகுதிகளில், பொதுமக்களும் விசேடமாக பாடசாலை மாணவர்களும் அதிகம் நடமாடும் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. பாடசாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 245 முக்கிய இடங்களைச் சுற்றியுள்ள 1,067 சில்லறை விற்பனைக் கடைகள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, முற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும், பரிசோதிக்கப்பட்ட கடைகளில் புறக்கோட்டை பகுதியில் 3 கடைகளிலும், கிருலப்பனை பகுதியில் 3 கடைகளிலும் மின் சிகரெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பொதுவாக வெற்றிலை பாக்கு வடிவில் கிடைக்கக்கூடிய புகையற்ற புகையிலை பொருட்கள் 170 கடைகளில் (15.9%) பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி, சுமார் 176 கடைகளில் இந்த புகையற்ற புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும், வணிக ஊக்குவிப்புகளும் பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளவத்தை, பொரளை, மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிக்கடைகளிலேயே இத்தகைய சட்டவிரோத வணிகமும் விளம்பரங்களும் மிக அதிகளவில் காணப்படுகின்றன.

சந்தையில் நேரடியாக விற்கப்படுவது ஒருபுறமிருக்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மின்-சிகரெட்டுகள் மற்றும் நிகோடின் தயாரிப்புகள் மிகத் தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் வழியாக இவற்றைச் சட்டவிரோதமாக விற்கும் 213 இணையப்பக்கங்கள் இந்த ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் ‘ஸ்னஸ்’ எனப்படும் நிகோடின் பாக்கெட்டுகள் மிகவும் பரவலாக விற்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு இணையவழி பணப் பரிவர்த்தனை முறைகள் மற்றும் வீடு தேடி வரும் விநியோக வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இது சிறுவர்களையும், இளைஞர்களையும் மிக எளிதில் நிகோடின் அடிமைகளாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, புகையிலை மீதான வரிகளை உயர்த்துவது என்பது அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதோடு, தொற்றா நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் உலகளாவிய உத்தியாகும். ஆனால், இலங்கையில் இந்த வரிவிதிப்புக் கொள்கைகளை முடக்குவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் புகையிலை தொழில்துறை பல்வேறு தந்திரங்களைக் கையாள்வது சி.சி.ரி. ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காகப் பொருட்களைப் பதுக்குதல், குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரைக் குறிவைத்து மலிவான சிகரெட்டுகளின் சந்தை நிலவரத்தைத் தக்கவைத்தல், கொள்கை வகுப்பாளர்களிடம் தங்களுக்குச் சாதகமாகச் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற 8 முக்கிய வழிமுறைகளின் கீழ் புகையிலை நிறுவனங்கள் அரசின் கொள்கைகளில் தலையீடு செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை வெறும் காகித அளவில் மட்டுமன்றி, களத்தில் மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வுக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய வடிவங்களில் வரும் மின் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை முற்றாகக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்தில் புதிய திருத்தங்கள் அவசரமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சில்லறை விற்பனைக்கான உரிமங்களை முறைப்படுத்துவதோடு கடைகள் மற்றும் இணையத்தளங்கள் மீதான கண்காணிப்பு வழிமுறைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0