உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“கடந்த வாரம் டொலரின் மதிப்பு சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக அசாதாரணமாக உயர்ந்தது.

அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு டொலர்களை வழங்கிய போதிலும், தற்போது மீண்டும் டொலரின் மதிப்பு அதிகரித்து இன்று 339.50 ரூபாவை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 695 மில்லியன் டொலர் போன்ற பெருந்தொகை கிடைத்த போதிலும் ரூபாவை வலுப்படுத்த அரசால் முடியவில்லை.

அரசின் மீதான சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், வெளிநாட்டு ஊழியர்களும் ஏற்றுமதியாளர்களும் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் தாமதம் காட்டுகின்றனர்.

அத்துடன் டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் டொலர்களைத் தம் வசம் வைத்துள்ளனர்.

மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நெருங்கிய நண்பர்களுக்குச் சாதகமாக 1,700 வாகனங்களை இறக்குமதி செய்ய 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் உறுதிப்பத்திரங்கள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளன.

மே 16 ஆம் திகதி வர்த்தமானி வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, அதாவது மே 15 ஆம் திகதியே இந்தக் கடன் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதி பெற்ற அதே தரப்பினருக்கே இந்த வாகன இறக்குமதி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் இலாபங்களை ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களே அனுபவிக்கின்றனர்.” – என்று குற்றம் சுமத்தினார்.

மத்திய வங்கியின் தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய அவர்,

“மத்திய வங்கி அதிகாரப்பூர்வமற்ற முறையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரமே கடன் கடிதங்களை வழங்குமாறு வணிக வங்கிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மத்திய வங்கி உடனடியாக நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி திறைசேரி நிரம்பியுள்ளதாகக் கூறினாலும், மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை.

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைப் போன்றே தற்போதைய அரசும் தன்னிச்சையான, அவசர பொருளாதார முடிவுகளை எடுத்து வருகின்றது.

இதன் இறுதிப் பாதிப்பை நாட்டின் ஏழை மக்களே அனுபவிக்க வேண்டியுள்ளது.” – என்றார்.

ஜனாதிபதியின் அண்மைய உரைகள் குறித்து முஜிபுர் ரஹ்மான் சாடுகையில்,

“ஜனாதிபதி தான் 20 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்யப் போவதாகக் கூறுகின்றார்.

20 வருடங்கள் பற்றி பிறகு பேசலாம், முதலில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நாட்டைச் சரியாக வழிநடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.

அரசின் மீதான மக்கள் மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்களின் விரக்தியை மூடிமறைக்கவே ஜனாதிபதி இவ்வாறான வெற்று அறிக்கைகளை விடுத்து வருகின்றார்.

மக்களைக் கவரும் அரசியல் பேச்சுகளால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அரசு செயற்பட வேண்டும்.

மக்களின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியின் ‘கற்பனைக் கதைகள்’ மூலம் ஒருபோதும் தீர்வு காண முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0