உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொருளாதார நெருக்கடி இனி ஏற்படாது! – மத்திய வங்கி ஆளுநர் உத்தரவாதம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கடந்த 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் நாட்டில் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

பூகோள அரசியல் மற்றும் எதிர்மறையான உலகளாவிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டில் பணவீக்கம் எதிர்வரும் காலப்பகுதிகளில் 7 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட போதிலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விகளைச் சமப்படுத்தி அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் நிலைமைகள் ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அது குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவடையும் என்றே அப்போதைய பூகோளக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்க்கப்பட்டது.

அதன் காரணமாக, 2 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமளவில் மாத்திரமே அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள தற்போதைய பின்னணியில், சர்வதேச ரீதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கப்பல் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.

இவ்வாறான நெருக்கடி நிலைமையினால், கடந்த ஒரு மாத காலத்துக்குள் உள்நாட்டுப் பணவீக்கம் 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவீனம் 2 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையாகத் தேசிய மட்டத்திலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால், உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது கியூ.ஆர். கோட்டா முறையை மீண்டும் கடுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்கம் 7 சதவீதமளவில் உயர்வடைவதற்குச் சாத்தியமிருந்தாலும், எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் சந்தையில் பொரு ள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையைச் சமப்படுத்தி, பணவீக்கத்தைக் குறைப்பதற்குக் கடுமையான நாணயக் கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீரழிவு நிலைமைதான் தற்போதைய 2026ஆம் ஆண்டும் காணப்படுகின்றது எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில், 2022ஆம் ஆண்டு உள்நாட்டு மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான மற்றும் தன்னிச்சையான பொருளாதாரத் தீர்மானங்களினால்தான் நாடு பாதிக்கப்பட்டுப் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன.

அவ்வாறானதொரு பலவீனமான நிர்வாகத் தன்மை தற்போது அரசிடம் கிடையாது.

தற்போதைய அழுத்தங்கள் அனைத்தும் முற்றிலும் பூகோளப் போர்ச்சூழல் மற்றும் உலகளாவிய காரணிகளினால் ஏற்பட்டவையாகும்.

இந்த நெருக்கடியைச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யக்கூடிய பலம் மத்திய வங்கிக்கு உள்ளது.

தற்போது வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை சீராக முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை ரூபா மற்றும் டொலர் கையிருப்பும் மிக ஸ்திரமான மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது.

பணவீக்கமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது.

ஆகவே, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான பொருளாதார நெருக்கடி மற்றும் வரிசை யுகம் நாட்டில் இனி ஒருபோதும் ஏற்படாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உத்தரவாதம் அளிக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0