தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அவர் குறி்பிட்டுள்ளார்.
வலைஒளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது இரகசியமான விடயம் அல்ல எனக் குறிப்பிட்டார்.
அவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன், முன்னாள் புலிகளின் தளபதியான கருணா அம்மானை (விநாயகமூர்த்தி முரளிதரன்) நாம் விசேட விமானம் மூலம் சம்பவ இடத்துக்கு (முள்ளிவாய்க்கால்) அனுப்பி வைத்தோம்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரின் சடலங்களை அவரே நேரில் பார்த்து அடையாளம் காட்டினார்.
குறிப்பாக, பொட்டு அம்மானின் மனைவியின் சடலத்தைக் கண்டெடுத்த போது அவரது கழுத்தில் மூன்று சயனைட் குப்பிகள் இருந்தன.
பொட்டு அம்மானுக்குத் துப்பாக்கிச்சூடு பட்டதும், அவர் தனக்குத்தானே குண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டார் எனப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. கூடப் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.” – என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்ட போது தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து பொன்சேகா மேலும் விவரிக்கையில்,
“பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்ட போது அதில் பாரிய காயங்கள் இருந்தன.
இது பற்றி போர்க்களத்தில் இருந்த தளபதிகள் எனக்கு உடனடியாகத் தெரியப்படுத்தினர்.
அப்போது சடலம் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடையில் இருந்தது.
இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளைக் கூட நாம் சீருடையுடன் இருக்க அனுமதிக்கவில்லை.
எனவே, பிரபாகரனின் சடலத்திலிருந்த சீருடையை உடனடியாக அகற்றுமாறு நான் உத்தரவிட்டேன்.” – என்றார்.
மேலும்,”பிரபாகரனின் சடலத்துக்கு இறுதி நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இராணுவத் தளபதியாக நானே ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினேன்.
ஆனால், அது என்னவென்பதை நான் இப்போது கூற மாட்டேன்.
போர் நடந்த அதே பகுதியிலுள்ள குறிப்பிட்டதொரு இடத்தில் தான் சடலத்துக்கு இறுதியாகச் செய்ய வேண்டியவற்றை நாம் செய்தோம்.
அந்த இடத்தை ஏன் என்னால் பகிரங்கமாகச் சொல்ல முடியாது என்றால், நான் இடத்தைக் கூறினால் எமது நாட்டின் சில தரப்பினர் அந்த இடத்துக்குச் சென்று நினைவேந்தல்களை நடத்த முற்படக்கூடும்.
அதுமட்டுமன்றி, அந்த இடத்தில் பிரபாகரனுக்காக ஒரு நினைவகத்தைக் கூட அமைக்க அவர்கள் முற்படலாம்.
அதனாலேயே இந்த விபரத்தை மறைத்து வைத்திருக்கின்றேன்.” – என்ரும் பொன்சேகா கூறினார்.
அதுமட்டுமன்றி இறுதிப் போரின் உத்திகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
போர்க்களத்தில் பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை என்பதையும் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.










