உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கின் அபிவிருத்திக்கு விசேட செயற்றிட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகளை மக்கள் சட்டபூர்வமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலை மீளப்பெற அரசை வலியுறுத்துதல் குறித்துக் கோரப்பட்டது. அத்துடன், காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை இந்து கலாசாரப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்குவது குறித்தும் பேசப்பட்டது.

மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அரசுக்குக் கையளித்த குறித்த அமைப்புகளிடமே மீண்டும் கையளித்தல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் மூடப்படும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூட வசதிகளுடன் மேம்படுத்துதல் குறித்துப் பரிசீலிக்கப்பட்டது.

மேலும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பிரபல்யமான பாடசாலைகளுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில் பேசப்பட்டது. மேலும், தீவுப்பகுதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைக்கான போக்குவரத்து மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன், “சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் கொள்கை ரீதியான முடிவுகளைக் கொண்டிருப்பதால், அவை தொடர்பில் மத்திய அரசுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. அதேவேளை, மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்களை மிக விரைவாக ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – என்று உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0