மும்பையின் பைதுனி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இரவு உணவுக்குப் பிறகு அந்த குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டிருந்த நிலையில், அவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. எனவே, மரணத்துக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், உணவு மற்றும் தர்பூசணி மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
ஏப்ரல் 25 ஆம் திகதி இரவு 10 முதல் 10:30 மணியளவில் அந்தக் குடும்பத்தினர் சில உறவினர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். உறவினர்கள் சென்ற பிறகு, நள்ளிரவு 1:30 மணியளவில் அவர்கள் தர்பூசணி சாப்பிட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம். அந்தக் குடும்பத்தினர் பைதுனி பகுதியில் உள்ள ஒரு பழைய முகலாய கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்தனர். அப்துல்லா டோகாடியா (40 வயது), அவரது மனைவி நஸ்ரின் டோகாடியா (35 வயது) மற்றும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு இளம் மகள்கள் அந்தக் குடும்பத்தில் இருந்தனர்.
அவர்களில் மூவர் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










