இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் க்யூ பிரிவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரியமான் கடற்கரை அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை போலீசார் எடுத்து சோதனை செய்தனர்.
இதன்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 பெட்டிகளில் சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகுகள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? என கடற்கரை ஓரம் க்யூ போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.










