நிதிச் செயலாளர் உடனே பதவி விலக வேண்டும்.!
“ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நிதி அமைச்சின் செயலாளர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி அவரை நீக்க வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் கூறுகையில்,
“கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்தப் பாரிய நிதி மோசடி, நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்திலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வளவு காலம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயன்றது ஏன்? இது குறித்து ஏன் இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்படவில்லை?
நிதி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழுவை அமைப்பது ‘திருடனிடமே சாவிக்கொடுத்த கதையாக’ முடியும். அரசியல் நியமனமான தற்போதைய நிதிச் செயலாளருக்கு அரச துறையில் எவ்வித அனுபவமும் இல்லை.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றோர் விசாரணைக் குழுக்களுக்குச் சென்ற முன்னுதாரணங்கள் உள்ளன.
ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அனைத்தையும் மறைக்க முயல்கின்றனர். நிலக்கரி கொள்வனவு மோசடி விசாரணைக் குழுவிலும் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விசாரணைக் குழுக்களின் சுயாதீனம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாகி வருகின்றன. உண்மையை எவ்வளவு காலம் மறைத்தாலும் அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.” – என்றார்.