பஞ்ச புராணம் ஓதுதல் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் விழா.!
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் இந்தியா கந்தர்வக்கோட்டை கயிலை அறக்கட்டளை மூலம் பஞ்ச புராணம் ஓதுதல் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் விழா இடம்பெற்றது.
பாடசாலையில் மாணவர்களின் ஆன்மீக அறிவையும், தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் ‘பஞ்ச புராணம் ஓதுதல் போட்டி’ இன்று (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை கயிலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலைத் தலைமையாசிரியர் பெ. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பஞ்ச புராணப் பாடல்களை முறையாகவும் பக்தியுடனும் ஓதித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கயிலை அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கயிலை அறக்கட்டளை நிறுவனர் இரா. துரைசாமி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ. வி. பொன்னம்மாள் ஆகியோரின் வழிகாட்டலில் இந்தச் சான்றிதழ்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியதுடன் இதுபோன்ற போட்டிகள் எதிர்கால சந்ததியினருக்குத் தமிழ் மரபைக் கொண்டு சேர்க்கும் என வாழ்த்தினர்.
இப்போட்டியானது மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றுடன் கூடிய ஒழுக்க விழுமியங்களை விதைக்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்ததாகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.









