கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல்.!
ஈரான் ஏவுகணை தளம் மீது குண்டுகளை வீசி அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு மசகு எண்ணெய் கப்பலும் செல்லக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவுமாறு சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தன.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை அருகே அமைந்துள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது.5,000 பவுண்ட் எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தகர்க்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரான் கடற்கரையோரத்தில் உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது, அமெரிக்கப் படைகள் துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தளங்களில் உள்ள ஈரான் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. இவ்வாறு அமெரிக்கா கூறியுள்ளது.