ஆப்கானிஸ்தானில் தலிபான் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்.!
ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள இராணுவ மையங்கள், மலைப்பகுதியில் உள்ள தலிபான் அமைப்பினர்களின் மறைவிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுந்ஜடா ஆகியோர் இருக்கும் காந்தகாரில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் மையம், கிடங்குகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
காந்தகாரில் ஆப்கன் தலிபான்கள், மற்றும் பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான்கள் பயன்படுத்தும் சுரங்கங்கள் மீதும் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. காந்தகாரில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக காந்தகார் மக்கள் தெரிவித்தனர்.
“காபூல், காந்தகார், பக்திகா ஆகிய இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசின. இதில் பலர் இறந்தனர். காந்தகாரில் போதைப் பொருள் மறுவாழ்வு மையம் மற்றும் காலி கன்டெய்னர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் இராணுவ மையங்கள் எல்லாம் வெகு தொலைவில் உள்ளன” என தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.