ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை.!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேரின் நினைவாக தோண்டப்பட்ட கல்லறைகளின் புகைப்படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.ஈரானின் மினாப் நகரில் உள்ள ராணுவ தளத்தை இலக்காகக் கொண்டு கடந்த 28ஆம் திகதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ராணுவ தளத்திற்கு அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது சமூக வலைதளப் பதிவில், திறந்தவெளி மைதானத்தில் வரிசையாக தோண்டப்பட்டுள்ள கல்லறைகளின் படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், அமெரிக்க – இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களுக்காக இந்த கல்லறைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அப்பாவிமக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பள்ளியில் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கிடையில் தேடுதல் நடத்தும் காட்சிகளும், மாணவர்களின் பள்ளிப் பைகள் மீட்கப்படும் காட்சிகளும் காணொளிகளில் பதிவாகியுள்ளன.இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ள ஈரான், பொதுமக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.