உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
84 பார்வைகள்

“சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது. எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அநுர அரசிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“விவசாயிகளைப் பலப்படுத்தி நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் விவசாயிகள், மீனவர்களை பலப்படுத்தாமல் வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகர்களை பலப்படுத்துவதையே அரசு செய்கின்றது. இப்போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.

ஒரு பேனையில் அரிசி மாபியாவை இல்லாமல் செய்வதாகக் கூறினர். ஆனால் இப்போது நடப்பது வேறு. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நட்டஈடு வழங்கப்படவில்லை. வீடுகள் வழங்கப்படவில்லை. 100 இலட்சம் ரூபா வழங்குவதாகக் கூறினர். பொய்யை நாடாளுமன்றத்துக்குள் கூறினர்.

விவசாயிகள், மீனவர்களைப் பாதுகாக்காமல் – உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இந்த அரசால் பயணிக்க முடியாது. ரில்லியன் ரூபா நிதி கையிருப்பில் இருப்பதாகக் கூறினர். அதில் நட்டஈட்டை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் வழங்கிய காசோலைகள் திரும்பி வருகின்றன. வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைக்கின்றீர்கள். போர்க்காலத்திலும் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறும் நிலையில் உங்கள் கட்சித் தலைமையகத்துக்கு அருகில், இராணுவத் தலைமையகத்துக்கு அருகில் பாதுகாப்பு பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது.

இது குறித்து அரசின் பதில் என்ன? சட்டத்தரணி கொல்லப்பட்ட பின்னர் திட்டமிட்ட குற்றக் கும்பல் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி என்று அரசு பதிலளிக்கின்றது. அப்படியென்றால் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் சட்டத்தரணியே. அவரின் சேவை பெறுநர் யார்? அவரும் திட்டமிட்ட குற்றக்கும்பலுக்காக முன்னிலையாகியுள்ளார். அது அவர்களின் தொழில்சார் கடமையே. இவ்வாறான நிலைமையில் சட்டத்தரணி கொல்லப்படும் போது அந்தக் கொலையை ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் மீது சுமத்தி நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சில ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பின்னால் அரசு இருக்கின்றது என்பது தெளிவானது. அது பெலவத்த அலுவலகத்தில் இருந்தா? ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தா? பிரதமர் அலுவலகத்தில் இருந்தா? நிர்வாகிக்கப்படுகின்றது என்று எமக்குத் தெரியாது.

பிரதமர் மன்னார் சென்றிருந்தார். யுத்தம் தங்களிடம் கேட்டுச் செய்யவில்லை என்று கூறியுள்ளார். 1988 மற்றும் 1989 காலங்களில் நடந்த சம்பவங்கள் எங்களிடம் கேட்டா இடம்பெற்றது. பயங்கரவாதமும் இருந்தது. இப்போது அவை இல்லை. இந்த நேரத்தில் அங்குள்ள மக்களின் மனநிலையுடன் விளையாடுவது நியாயமற்றது.

உங்களால் இராணுவ வீரரை வீரர் என்று கூற முடியவில்லை. ஆனால் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது இராணுவத்தைப் பயன்படுத்த முடியும். அவசர நிலைமைகளில் அவர்களிடமே ஓடிப் போக வேண்டியுள்ளது. எனினும் அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்க முடியவில்லை. அச்சுறுத்தல் விடுத்து அரசைக் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றீர்கள்.

அரகலய போராட்டக் காலத்தில் ஊர்சாகப்படுத்தி இப்போது 12 பேர் தூக்கு மேடைக்குப் போயுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள். நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது நடவடிக்கை.!

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக்…

49 0 0