பங்களாதேஷின் புதிய பிரதமர் பதவிப்பிரமாணம்.!
பங்களாதேஷின் புதிய பிரதமராக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று (17) ஜனாதிபதி முகம்மது ஷகாபுதின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த வாரம் வியாழக்கிழமை (12) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், 297 தொகுதிகளில் 209 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற தேசியவாதக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மக்களால் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தாரிக் ரஹ்மானுடன் இணைந்து 25 அமைச்சர்களும் 24 இணை அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். 60 வயதான ரஹ்மான் முன்னாள் பிரதமரான மறைந்த கலிதா ஸியாவினதும், படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி சியாவூர் ரஹ்மானினதும் மகனாவார்.ரஹ்மான் பிரதமராக பதவியேற்றதும், மொஹமட் யூசுனின் இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக, திறந்தவெளி அரங்கில் நடந்த பதவியேற்பு வைபவம் சிறப்பம்சமாக விளங்கியுள்ளது.