மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!
தெற்காசிய நாடான பங்களாதேஷ்வில் நடைபெற்ற முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடைபெற்ற இத்தேர்தல், நாட்டின் சமீபத்திய அரசியல் பரபரப்புகளுக்குப் பிறகு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரின் மகனான 60 வயதுடைய தாரிக் ரஹ்மான் தலைமையில் BNP இத்தேர்தலை சந்தித்தது.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு, நீண்டகால பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா 2024 ஆம் ஆண்டு “ஜெனரல் இசட்” எழுச்சியால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலாகும்.“ஜாதியா சங்சாத்” எனப்படும் பங்களாதேஷ் சட்டமன்றத்தின் மொத்த 300 இடங்களில், BNP மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி சேவைகள் தெரிவித்துள்ளன.
மறுபுறம், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சித் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவரது கூட்டணி வெறும் 68 இடங்களையே பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுடன் இணைந்து நடைபெற்ற வாக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள், எதிர்கால சர்வாதிகார ஆட்சியைத் தடுக்கும் வகையில் அரசியலமைப்பை சீர்திருத்த மக்கள் ஆதரவு அளித்துள்ளதாகக் காட்டுகின்றன.BNP தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷை எந்த ஒரு தனி சக்தியுடனும் நெருக்கமாக இணைக்காமல், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச கூட்டாண்மைகளை மறுசீரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இது, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய தலைநகர் புது டெல்லியுடன் நெருக்கமாக இருந்ததாகக் கருதப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.இந்த தேர்தல் முடிவு, 175 மில்லியன் மக்கள் வாழும் பங்களாதேஷில் அரசியல் மற்றும் பொருளாதார திசை மாற்றத்திற்கான முக்கிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.