நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் யுவதியொருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
மாவனெல்ல – நாரம்பிடிகொட பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடையவர் எனவும், கிஹல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நோக்கிப் பயணித்த உந்துருளி எதிர் திசையில் வந்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தம்புள்ளை – ஹபரணை வீதியில், இனாமலுவ பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் சந்தி நோக்கிப் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உந்துருளி ஓட்டுநர் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிகிரியா பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், வாரியபொல – பண்டாரகொஸ்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) மதியம் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யஹலதென்ன பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
வாரியபொல நோக்கிப் பயணித்த உந்துருளி எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கிரியெல்ல – முனசிங்கபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த எரிபொருள் தாங்கி வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு எரிபொருள் தாங்கியின் கீழ் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மூன்று பயணிகள் காயமடைந்து சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர் அயகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய எரிபொருள் தாங்கி வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.