பதவி ஆசையற்ற, சலுகைகளுக்கு விலைபோகாத பெருந்தலைவர் – மாவை.சோ.சேனாதிராஜா: வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராஜா, பதவி ஆசையற்றவர் என்றும், சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாத பெருந்தலைவர் என்றும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மாவை.சோ.சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை, இன்று (சனிக்கிழமை) காலை வடக்கு மாகாண ஆளுநரால் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மாவை.சோ.சேனாதிராஜாவை எனக்கு எனது பத்து வயதிலிருந்தே தெரியும். அவர் எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்து வந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடத்திய ஆசானாகவும் அவர் திகழ்ந்தார்.நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்த போதிலும், அவர் எப்போதும் மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். எந்த நேரத்திலும் எவரும் அவரை இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது.
அவர் பதவி ஆசை இல்லாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில், அவர் மிக வித்தியாசமான மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார்.அவர் அப்பாவியான மனப்பாங்கு கொண்டவர். உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர். அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, தனது இளமைக்காலத்தைத் தியாகம் செய்து, பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இத்தகைய சிறந்ததொரு தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும்” எனத் தெரிவித்தார்.இதன் போது, மாவை.சோ.சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய “ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராஜா” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தமிழகம், புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்த பெருமளவானோர் கலந்துகொண்டனர்.