முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி நிகழ்வு அனுஷ்டிப்பு!
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கருப்பு ஜனவரி தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும், கருப்பு ஜனவரி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வும் இன்று (31) இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களைப் பொறுத்தளவில், ஜனவரி மாதம் “கருப்பு ஜனவரி” என அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நீதிக்காக குரல்கொடுத்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதோடு, பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பல ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான பெரும்பாலான சம்பவங்கள் ஜனவரி மாதத்திலேயே இடம்பெற்றுள்ளதன் காரணமாக, ஊடகவியலாளர்கள் ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக நினைவுகூர்ந்து வருகின்றனர். குறித்த மாதத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூறுவதோடு, அவர்களது கொலைகளுக்கு நீதிகோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், ஊடகவியலாளர்கள் தொடர்ந்து ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றனர்.அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான நினைவு நிகழ்வும், கருப்பு ஜனவரி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வும், முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னதாக முல்லைத்தீவு ஊடக அமைய வளாகத்தில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்திய காரணத்தினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, மற்றும் கடத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு நகரிலும், முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலும், கருப்பு ஜனவரி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.குறித்த துண்டுப் பிரசுரத்தில்,
“தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு 56 வயதாகியிருக்கும். ஆனால், வேதனையளிக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது 36ஆவது வயதில், அரச கொலையாளிகளால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்
“2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, கிழக்கு கடற்கரை நகரான திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மறுக்க முடியாத புகைப்பட ஆதாரங்களுடன் சுகிர்தராஜன் உலகிற்கு வெளிப்படுத்தினார். அந்த மாணவர்கள் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர் என இலங்கை அரசு பச்சைப் பொய் கூறிய நிலையில், உண்மையை வெளிக்கொண்டுவந்ததன் காரணமாகவே சுகிர்தராஜன் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகரில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட உட்பட பலரும் இதேபோன்ற துரதிருஷ்டவசமான நிலைக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சுகிர்தராஜனுக்கு முன்னரும் பின்னரும் உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததன் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆகும் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும், அதிலும் அதிகளவானவர்கள் ஜனவரி மாதத்தில் பலியானவர்கள் என்றும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், பல ஊடக நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் பெரும்பாலும் ஜனவரி மாதத்திலேயே இடம்பெற்றுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாததுடன், அவர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு வருவதாகவும், உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளதன் காரணமாக, இன்று முழு நாடும் இருண்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது



