நிபா வைரஸ் அபாயம் இலங்கையில் குறைவு – சுகாதார செயலாளர் அறிவிப்பு.!
இலங்கையில் நிபா வைரஸ் பரவுவதற்கான அபாயம் தற்போது மிகக் குறைந்த நிலையில் உள்ளது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.சுகாதார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டியதில்லை என்றும், நிலவும் சூழலைப் பற்றிய நம்பகமான தகவல்களை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர் கூறியதாவது, அண்மையில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சில நிபா வைரஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும், உலக சுகாதார நிறுவனம் எந்தவொரு சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை.நிபா வைரஸ் பெரும்பாலும் விலங்குகளிடையே, குறிப்பாக வெளவால்கள் மூலம் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது பொருட்களுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் போது மட்டுமே அரிதாக மனிதர்களுக்கு பரவக்கூடும். மனிதர்களிடையே இது பரவுவது மிக நெருக்கமான மற்றும் நீண்டகால தொடர்புகள் வழியாக மட்டுமே நிகழ்கிறது, இன்ஃபுளூயன்சா போன்ற காற்றின் வழி பரவக்கூடிய வைரஸ் அல்ல.இலங்கையில் நிபா வைரஸ் கண்டறிதலும் எதிர்கொள்ளும் வசதிகள் போதுமான அளவில் உள்ளன.
நோயாளிகளை விரைவாகக் கண்டறிய வலுவான நோய் கண்காணிப்பு அமைப்பு நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் நவீன ஆய்வக வசதிகளுடன் நோயைக் கண்டறிந்து வருகின்றன, மேலும் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பிராந்திய ரீதியிலான நிலைகளை சுகாதார அமைச்சு கவனித்து வருகிறது.பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைவதை தவிர்த்து, உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களின் மூலம் மட்டுமே தகவல் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.