“மகிழடித்தீவு படுகொ*லை நினைவு தினம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி கோரிக்கை.!
மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் இன்று மாலை மகிழடித்தீவின் நினைவுத்தூபியருகே நடைபெற்றது. மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் ஏற்பாட்டில், பிரதேசசபை தவிசாளர் இ. கிரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது, உயிர்நீர்த்தவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டி அகவணக்கம் செலுத்தப்பட்டது.28-01-1987 மற்றும் 12-06-1991 ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடி படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் 239 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் அடங்கியுள்ளனர். கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியதாவது: “1987ம் மற்றும் 1991ம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை. ஜே.ஆர். ஜெயவர்த்தனவ் முதல் பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க, கோத்தபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க வரை பல அரசாங்கங்கள் மாறியுள்ளன; ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


