திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு – ஐந்து டிங்கி படகுகள் கைப்பற்றல்.!
தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், மணல் கொள்ளையர்கள் தற்போது நேரடியாக கடல் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அகழ்வில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.திருகோணமலை, உப்பாறு மற்றும் மகாவலி கங்கை அண்மித்த பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, படகுகளில் சுமார் 30 லிட்டர் அளவிலான சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.சட்டவிரோத மணல் அகழ்வும், சட்டவிரோத மதுபானக் கடத்தலும் சுற்றுச்சூழலுக்கும் சமூக ஒழுங்குக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
