ரி 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை உந்துருளியில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரால் வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரின் உடைமையில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிக்குரிய 8 ரவைகள் கண்டறியப்பட்டதையடுத்து, உந்துருளியுடன் அந்த 8 ரவைகளும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.