பாதுகாப்புத் தரப்பினரின் சொல்லுக்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது.!
2023 இல் அப்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய தேசிய மக்கள் சக்தி, இப்போது பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதனையொத்த சட்ட வரைவையே ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ எனும் பெயரில் வெளியிட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்ட வரைவின் உள்ளடக்கங்கள் குறித்துத் தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்கமைய இவ்வரைவின் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை கடந்த 2023 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையே ஒத்திருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்கும் விஜித ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இப்போது அதன் உள்ளடக்கத்திலிருந்து பெருமளவுக்கு மாறுபடாத புதிய வரைவை அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி இப்புதிய வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்த பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இப் புதிய வரைவு கூடப் போதுமானதல்ல என முரண்பட்டதாக அறியக் கிடைத்ததாகச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னிறுத்திய தமது கொள்கையைப் புறந்தள்ளிட்டு, இப்போது அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இவ்வரைவை வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.