அடைமழைக்கு மத்தியிலும் அம்பாறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா
அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் இன்று (24) கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தின் காரைதீவு, சம்மாந்துறை, பெரியநீலாவணை, கல்முனை, பாண்டிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களிலும், பொதுமக்களின் வீடுகளிலும் விளக்கேற்றப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கார்த்திகை மாதப் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் புனித நாளில், சீரற்ற காலநிலை மற்றும் அடைமழை காரணமாக ஏற்பட்ட சிரமங்களையும் பொருட்படுத்தாது மக்கள் வீடுகள், முற்றங்கள் மற்றும் ஆலய வளாகங்களில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இருள் நீங்கி வாழ்வில் ஒளியும் சுபீட்சமும் பெருக வேண்டும் என்ற உயரிய நம்பிக்கையுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடி இத்தீபத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்









