சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஸக்காப் மௌலானா ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். ரஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி கௌரவ அதிதியாகவும், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீத் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம். பாமி மேலும் தெரிவித்ததாவது,
மருதம் கலைக்கூடல் மன்றம் பல்வேறு திறமைகளைக் கொண்ட கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் அறிவாளிகளை ஒன்றிணைத்து சமூகத்திற்குப் பயனுள்ள பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளிலும் இம்மன்றத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இவ்வாறான கலை, கலாச்சார மற்றும் கல்விசார் பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு எமது பிரதேச மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கியமான ஆரம்ப கட்டமாகும். எதிர்காலத்தில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூகத் தலைவர்களாக உருவாகுவதற்கான அடித்தளத்தை இப்பருவத்திலேயே சிறப்பாக அமைக்க வேண்டும். இதற்காகப் பெற்றோர்கள் மேற்கொள்ளும் தியாகங்களும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளும் அளப்பரியவை. இலங்கையின் இலவசக் கல்வி முறைமை எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதநேயப் பண்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் எமது சமூகத்தைப் பெரிதும் பாதித்து வரும் பிரச்சினைகளில் போதைப்பொருள் பாவனை முக்கியமானதாகும். குறிப்பாக, பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும். பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நட்பு வட்டங்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பாடசாலைகளை மையப்படுத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை சாய்ந்தமருது புதிய பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பது தொடர்பிலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது பிள்ளைகளைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்து, சிறந்த சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.














