ராமர் கோயில் நன்கொடை திருட்டு: குற்றப்பத்திரிகையில் முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி!
ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியிப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முக்கிய சந்தேக நபர்கள் இணைக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதில் கூறியிருப்பதாவது:
ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 74,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றப்பத்திரிகை திருட்டுகள் குறித்த முழுமையான கணக்கை வழங்குகிறதா, அல்லது வெறும் 8 ஊழியர்களை மட்டும் குற்றவாளிகளாக காட்டி, முக்கிய நபர்களை காப்பாற்றவும், முக்கியமான கேள்விகளை தவிர்க்கவும் முயல்கிறதா?
ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பொறுப்பில் இருந்த நிலையில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்படவில்லை.
குற்றப்பத்திரிகையில் அவர்கள் முறையே 18, 17 மற்றும் 19வது சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அப்படியெனில், திருட்டு ஆதாரத்தை பெற்றவர்கள் மற்றும் மீட்கப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டபோது உடனிருந்த உயர் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் குறித்து எந்த அளவிற்கு விசாரணை நடத்தப்பட்டது?
ரூ.200 கோடி திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டிய சந்தோஷ் துபே புகார் மீது ஏன் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை?
மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில், வெறும் 8 ஊழியர்களுடன் விசாரணையை முடித்துக்கொள்ளாமல், அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் அனைவரின் பங்கையும் ஆராய உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார்.


