நடிகர் கமல்ஹாசன் குறித்து அவரது முன்னாள் மனைவி வானி கணபதி விமர்சனம்
நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மனைவியான நடனக் கலைஞர் வானி கணபதியுடனான விவாகரத்துக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் பணமின்றி பூஜ்ஜிய நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியதாகக் கூறிய கருத்துக்கு, வானி கணபதி கடுமையாகப் பதிலளித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன், விவாகரத்து தொடர்பான ஜீவனாம்சக் கொடுப்பனவுகளால் தனது பணம் அனைத்தையும் இழந்ததாகவும், இதனால் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வங்கிக் கணக்கில் பணமின்றி மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், அக்காலப்பகுதியில் தனது திரைப்பட வாழ்க்கை சிறப்பாக இருந்ததால் விரைவாக மீண்டெழ முடிந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றிய வானி கணபதி, கமல்ஹாசனின் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது திருமண வாழ்க்கைக் காலம் முழுவதும் வாடகை வீடுகளிலேயே வசித்ததாகவும், கமல்ஹாசனுக்குச் சொந்தமான பிரமாண்டமான வீட்டிலிருந்து விவாகரத்துக்குப் பின்னர் வாடகை வீட்டுக்கு மாறியதாகக் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னிடம் இருந்து பிரிந்ததால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, யாரிடமாவது அனுதாபத்தைப் பெறுவதற்காகவே கமல்ஹாசன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதில்லை என்றும் வானி கணபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கமல்ஹாசனுக்கும் வானி கணபதிக்கும் 1978ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதுடன், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
இதற்கிடையில், நடிகை சரிகாவுடன் கமல்ஹாசன் கொண்டிருந்த உறவின் மூலம் 1986ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் பிறந்தார்.
பின்னர் 1988ஆம் ஆண்டு சரிகாவைத் திருமணம் செய்துகொண்ட அவர், 2004ஆம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்றார்.
அதன்பின்னர் நடிகை கௌதமியுடன் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கமல்ஹாசன், 2016ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்தார்.


