செம்மணிப் போராட்டக் களத்தில் ராஜ் சோமதேவவின் உருவ பொம்மை எரிப்பு.!
யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதுடன், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பிரதிக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தச் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்த போராட்டக்காரர்கள், அதனை முற்றாக நிராகரிக்கும் வகையில் அந்த அறிக்கையின் பிரதிக்கும், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவ பொம்மைக்கும் தீ வைத்துத் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





