டிசம்பர் மாதம் 45,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!
நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிசம்பர் மாதத்திற்காக 45,000 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) இறக்குமதி செய்ய லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும், அவற்றில் 23,400 மெட்ரிக் தொன் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (18) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நுகர்வோருக்குத் தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, நவம்பர் 10ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் சுமார் 8 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாதாந்தம் வழக்கமாக விநியோகிக்கப்படும் 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை 45,000 மெட்ரிக் தொன்னாக நிறுவனம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


