உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சட்டத்தரணி சல்மான் சஃப்தர் ஊடாக வெளியிடப்பட்ட கடிதத்தில், தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக 74 வயதான இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
மூளையில் இரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும், தனது இதயம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வலது கண்ணின் பார்வையில் பெரும்பகுதியை இழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தினமும் சுமார் 22 மணிநேரம் தனிமைச் சிறையில் வைக்கப்படுவதாகவும், குடும்பத்தினரைச் சந்திக்கவும் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சியைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள், அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதாகவும், வாராந்த மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராகப் பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


