சச்சினுடன் வீதியில் கிறிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், தமது பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் நடைபெற்ற வீதிக் கிரிக்கெட் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இளவரசர் வில்லியமுடன் இணைந்து மேற்கொள்ளும் மிக முக்கியமான உயர் மட்ட வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மும்பை, பலார்ட் எஸ்டேட் (Ballard Estate) பகுதியில் பாரம்பரிய வாத்தியக் கலைஞர்களின் மேளதாள முழக்கங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் உள்ளூர் சிறுவர்கள் வீசிய பந்துகளை வில்லியமும் கேட் மிடில்டனும் எதிர்கொண்டு விளையாடினர்.
இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சூழலுக்கு உகந்த போக்குவரத்து மேம்பாட்டைக் குறிக்கும் வகையில், அவர்கள் மும்பை மெட்ரோ தொடருந்து சேவையிலும் பயணிக்கவுள்ளனர்.
காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக இளவரசர் வில்லியமால் 2020 இல் நிறுவப்பட்ட ‘எர்த்ஷாட் பரிசு’ போட்டிகளின் இறுதிப் போட்டியாளர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
தங்களது மூன்று நாள் இந்திய விஜயத்தை நிறைவு செய்யும் வகையில், புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இளவரசர் தம்பதியினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சையிலிருந்து குணமடைந்த பின்னர் பொது நிகழ்வுகளில் படிப்படியாகக் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ள 44 வயதான கேட் மிடில்டன், கடந்த மே மாதம் இத்தாலிக்கு மாத்திரம் தனிப்பட்ட முறையில் குறுகிய பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









