மஹேல ஜயவர்தனவுக்கு நாலந்தா கீர்த்தி ஸ்ரீ விருது!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவுக்கு, கிரிக்கெட் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி மதிப்புமிக்க ‘நாலந்தா கீர்த்தி ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான மஹேல ஜயவர்தன, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்து தனது பாடசாலைக்குப் பெருமை சேர்த்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், 149 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 448 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் இணைந்து 25,000 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், இலங்கை தேசிய அணியின் தலைவராகவும் பல முக்கிய வெற்றிகளுக்குப் பங்களித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பயிற்றுவிப்பு, வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் ஊடாக கிரிக்கெட் துறையில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
நாலந்தா கல்லூரிக்குப் பெருமை சேர்த்த தனிநபர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் அரிதான கௌரவங்களில் ஒன்றாக ‘நாலந்தா கீர்த்தி ஸ்ரீ’ விருது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


