கொக்கிளாய் பாலத்திற்காக 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு; தமது தொடர் முயற்சி வெற்றியளித்ததாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு
கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தாம் உரியதரப்பினரிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்தநிலையில், 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், குறித்த பாலத்தை அமைப்பதற்கு முதற்கட்டபாக 600மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்க 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்பு பாலம் அமைக்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக உரிய தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.
அந்தவகையில் கடந்த 07.03.2025 அன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் குறித்த பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து 13.08.2025 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும் கொக்கிளாய் – புல்மோட்டை பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதியால் அதன்போது என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து சாத்திய வள ஆய்வுகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இத்தகைய சூழலில் கடந்த 11.02 2026 அன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.
அந்தவகையில் குறித்த பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தரப்பினர், மே மாதத்திற்குள் அந்த சாத்தியவள ஆய்வுகளின் அறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பித்தால் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அப்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க என்னிடம் உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 21.05.2026அன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விடயங்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில், குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வு தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கேள்வி எழுப்பியதுடன், குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளுதல், சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
அத்தோடு எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகளை எடுப்போமெனவும் அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் பதிலளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கடந்த 21.05.2026 அன்று அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றிய முன்னேற்றம் குறித்து 07.07.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது 25.07.2026அன்று முல்லைத்தீவிற்கு தாம் வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், சாத்தியவள ஆய்வறிக்கைகள் தொடர்பில் பரசீலித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
அதற்கமைய குறித்த திகதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரடியாக வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளும் குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகள் தொடர்பான பரிசீலணைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறாக குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பது தொடர்பில் எம்மால் தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், தற்நோது 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் அந்தப் பாலத்தினை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எனது தொடர் முயற்ச்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகவே இதனைப் பார்க்கின்றேன்.
எனவே எனது தொடர்ச்சியான கோரிக்கையினை ஏற்று, கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் எனது நன்ளிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.


