யாழ்ப்பாணத்திலும் நவீன சொகுசு மெட்ரோ பேருந்து சேவை!
கொழும்பைத் தொடர்ந்து வடக்கிலும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவாக்கம் 2027ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யும் நோக்கிலான வெள்ளோட்ட சேவை இன்று பிற்பகல் 3:00 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
வந்தடைந்த பேருந்தையும், அதன் ஊழியர்களையும், அதில் வருகைதந்திருந்த அரசியல்வாதிகளையும் பருத்தித்துறை சாலை முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இலங்கையின் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையை வட மாகாணத்திற்கும் விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ், லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (Lanka Metro Transit) நிறுவனத்தின் நவீன சொகுசுப் பேருந்து சேவைக்கான முதற்கட்ட பரீட்சார்த்த வெள்ளோட்டம் இன்று (10.11.2026) யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலாலி முதல் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதியில் இந்தப் பரீட்சார்த்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வீதி நிலைமைகள், போக்குவரத்து நெரிசல், பேருந்து தரிப்பிடங்களின் பொருத்தப்பாடு உள்ளிட்ட விடயங்களை மதிப்பீடு செய்து, எதிர்காலத்தில் இச்சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் இந்த வெள்ளோட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் அறிவிப்புகளுக்கு அமைய, 2027ஆம் ஆண்டில் புதிதாக 50 மெட்ரோ பேருந்துகளைச் சேவையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக யாழ்ப்பாணம், கண்டி, காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் நவீன மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நவீன பொதுப் போக்குவரத்துச் சேவை தற்போது வடக்கிலும் பரீட்சார்த்த ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


