இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான இடைத்தரகர்களிடம் சிக்கிக்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி முக்கியமான ஆவணங்களும் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகத் திணைக்களம் வலியுறுத்துகிறது.
ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நேர ஒதுக்கீடுகளை (Appointments) மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்கனவே இணையவழி முறைமை மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சாதாரண வாகன உரிமையைப் பரிமாற்றுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த உத்தியோகப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றாமல் திணைக்கள வளாகத்திற்கு முன்னால் இருக்கும் இடைத்தரகர்களின் ஆலோசனைகளின் பேரில் செயல்படுவதால் சேவையைப் பெற வருவோர் தவறாக வழிநடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
இதன்படி, திணைக்களத்திலிருந்து சேவையொன்றைப் பெறும்போது உத்தியோகப்பூர்வ நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுமாறும், அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


