ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான மக்கள் வரிப்பணம் அரசாங்கத்தினால் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (03) தேசிய சுதந்திர முன்னணி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஒன்றியத்தின் உப தலைவர் பதவியை இலங்கையர் ஒருவர் முதன்முறையாக பெற்றுக்கொண்டது சுய திருப்திக்காகக் கொண்டாடுவதற்கே. வறுமையில் வாடும் பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித ஹேரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.
இதன் மூலம், 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாடு, இசை விழா மற்றும் கேளிக்கை சுற்றுலா ஆகியவற்றை நடத்துவதற்கான அனுசரணைத் தொகையாக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ஊடாக இரண்டு கட்டங்களாக இந்த 10 கோடி ரூபாவுக்கு அதிகமான நிதி வழங்கப்படவுள்ளது. இதில் பிரதிநிதிகளின் சுற்றுலாவுக்காக மட்டும் 1.26 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிகிரியாவை இராவணனுடன் தொடர்புபடுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது வரலாற்று பதிவுகளுக்கு முரணானவை ஆகும். இது இந்திய கலாசார நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுகளில் துருக்கி, தென்கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டை நடத்தியபோது, அவற்றின் அரசாங்கங்கள் தமது நாட்டின் அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனங்கள் ஊடாகவே தேசிய மட்டத்தில் நிகழ்வுகளை நடத்தின.
இலங்கையிலும் அரச நிறுவனங்கள் இந்த ஒன்றியத்தின் நீண்டகால உறுப்பினர்களாக உள்ளபோதிலும், அரச நிறுவனங்களைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்திற்குச் சார்பான தனியார் நிறுவனத்திற்கு மக்கள் பணம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்காததால், அதன் தலைவர் பதவி விலகிய பின்னரே அமைச்சரவை அதிகாரம் ஊடாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சாதாரண மக்கள் வரிகளாலும் வாழ்க்கைச் செலவாலும் நெருக்கடிக்கு உள்ளாகிவரும் நிலையிலும், ‘அஸ்வெசும’ நிவாரணப் பட்டியலில் இருந்து சுமார் 14 இலட்சம் குடும்பங்களின் பெயர்கள் வெட்டி நீக்கப்பட்டுள்ள சூழலிலும், அரசாங்கம் தனது நண்பர்களுக்கு பொது நிதியை வாரி வழங்கும் இவ்வாறான நட்புசார் முதலாளித்துவத்தில் ஈடுபடுவது தவறான செயலாகும்.
மக்கள் நிதியை பொதுச் சொத்துக்களைப் போலப் பாதுகாப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தனியார் நிறுவனங்களின் சுகபோகங்களுக்காக மக்களின் வரிப்பணத்தைக் கரைப்பதாக நடந்துகொள்கிறார்கள் என்றார்.


