உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
3 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையக மற்றும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? : மனோ கணேசன் எம்.பி கேள்வி!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு உரையில் தெளிவான பதில்களை வழங்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதீடு என்பது வெறுமனே அரசாங்கத்தின் வரவு செலவு கணக்கு மாத்திரமல்ல எனவும், அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை வெளிப்படுத்தும் உரையாகவும் அது அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்களுக்கு, அடுத்த ஆண்டிலாவது நடைமுறைத் தீர்வுகள் கிடைக்கும் வகையிலான அறிவிப்புகளை ஜனாதிபதி தனது கொள்கை உரையில் வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மனோ கணேசன், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அவற்றில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலைக் கொழுந்து மற்றும் இறப்பர் பால் ஆகியவற்றின் நிறையை அதிகரிப்பதன் மூலம் வேதன அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களும் அரசாங்கமும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பெருந்தோட்டங்கள், தனியார் பெருந்தோட்டங்கள் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்களின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே வேலைக்கு ஒரே வேதனம் என்ற அடிப்படையில் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், வேதன நிர்ணய சபையின் ஊடாக அதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், பெருந்தோட்டங்களில் வசிக்கும் திருமணமான ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் 15 பேர்ச் காணியை வழங்கும் வகையில் மலையக வதிவிடக் காணிக் கொள்கை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் நிதியுதவியுடன் பெருந்தோட்டப் பகுதிகளில் எத்தனை தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்பதை அறிவிக்க வேண்டும் என்றும், அவை காணி உரிமையுடன் கூடிய தனி வீடுகளாகவே அமைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு வழங்குவதாகக் கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ ஊடாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அந்த நடவடிக்கையை நிறுத்தி, மலையக இளைஞர்களுக்கு வாழ்வாதாரக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கொள்கையை அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் பின்தங்கிய நிலையில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்காக விசேட நிதி ஒதுக்கீடுகளை அறிவிக்க வேண்டும் என்றும், மலையக மக்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட NEVIDA மலையக அபிவிருத்தி அதிகார சபையைக் கலைக்கப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, தமிழ் பேசும் மக்களுக்கு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதன்படி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான வாக்குறுதியின் தற்போதைய நிலை என்னவென்றும், ஓராண்டுக்குள் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக முன்னர் வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக, அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய சட்டமூலத்தையோ திருத்தங்களையோ கொண்டுவராமல், தற்போதைய சட்டத்தையும் முன்மொழியப்பட்ட புதிய சட்ட வரைவையும் முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதாக வழங்கப்பட்ட உறுதிமொழி தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்துக்கும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டு கொள்கை உரையில் ஜனாதிபதி தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஏபியூ மாநாட்டுக்காக தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொது மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தனியார் ஊடக நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமான…

69 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு இறக்குமதி அரிசி வகைகளுக்கான விசேட பண்டவரி நீக்கம்!

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி…

76 0 0
இலங்கை செய்திகள்

ரம்புக்கனை நோக்கிச் சென்ற தொடருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை  நகர சபை தவிசாளருமான எம் கே சிவாஜிலிங்கம் பருத்தித் துறை ஆதார வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி முன்னாள்…

61 0 0