120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்தது முரசு புயல்!
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஒங்கோல் (Ongole) அருகே, இன்று (03) அதிகாலை முரசு (Murasu) தீவிர சூறாவளிப் புயல் கரையைக் கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீற்றர் வரை அதிகரித்ததாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புயல் வடக்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே, ஒங்கோல் நகருக்கு அருகில் கரையைக் கடந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புயல் கரையைக் கடப்பதற்கு முன்னரான ஆறு மணித்தியாலங்களில் மணிக்கு 9 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
கரையைக் கடக்கும் நடவடிக்கையின்போது, ஒங்கோல் நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவிலும், பாபட்லாவிலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவிலும், கவாலியிலிருந்து 70 கிலோ மீற்றர் தொலைவிலும், நெல்லூரிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலிருந்து 130 கிலோமீற்றர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்ததாக ஆந்திரப் பிரதேச மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நடவடிக்கை நிறைவடைய மேலும் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படுமென அச்சமயம் அதிகாரிகள் மதிப்பிட்டிருந்ததுடன், மணிக்கு 100 முதல் 120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் எச்சரித்திருந்தனர்.
இதற்கிடையில், புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு கோதாவரி, ஏலூரு, கிருஷ்ணா, என்.டி.ஆர். மற்றும் குண்டூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் நிர்வாக இயக்குநரும், நிகழ்நேர ஆளுகைச் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரகர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாபட்லா, பல்நாடு, மார்க்காபுரம், பிரகாசம் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்ற வானிலை நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், பலத்த காற்று மற்றும் கனமழை தொடர்பாக அதிகாரிகள் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புயல் அச்சுறுத்தலால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையில் பாசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது 11 விமானங்களும், விஜயவாடா விமான நிலையத்தில் 19 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 4 ஆம் திகதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


